Sunday, October 24, 2004

எனக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்....

பெரும்பாலான வார இறுதி நாட்களில் தொலைக்காட்சி மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன். இங்கு [ஐதராபாதில்] தமிழ் புத்தகங்கள் அவ்வளவாய் கிடைப்பதில்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பல்பொருள் அங்காடியில் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிக்கைகள் மட்டுமே கிடைத்து வருகின்றன. அவற்றை வார நாட்களில் படித்து விடுவதால் வாரத்தின் கடைசி நாள் தொலைக்காட்சியே சரணம். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் மிகவும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி ஜெயாவில் வரும் செல்லமே செல்லம். அதன் பிறகு இருக்கவே இருக்கிறது விசுவின் அரட்டை அரங்கம். அந்த வாரத்து தலைப்பை பொருத்து வேறு நிகழ்ச்சிகளுக்கு போவதுண்டு. டிஸ்கவரி சேனலின் ஒரு அங்கமான டிஸ்கவரி டிராவல் பல நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி வருவது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. அதுவும் ஞாயிறு என்றால் கொண்டாட்டம்தான். மதியம் என்ன செய்வதென்றே புரியாத சமயங்களில் பழைய புத்தகங்கள் படிப்பதுண்டு. அப்படியாக இந்த வாரம் படித்தது அசோகமித்திரன் அய்யா அவர்களின் பேட்டிகளும் கட்டுரைகளும். மாலைப்பொழுதுகளில் நண்பர்களோடு காலாற நடை பயின்றுவிட்டு வீடு திரும்பினால் simpsons, அதன் பிறகு wwe wrestiling. இப்படியாய் என் ஞாயிற்றுக்கிழமைகளை ஒரு வழியாய் ஓட்டிமுடிக்கின்றேன்.
[இப்பொழுதும், இன்னும் நான் தட்டச்ச பழகிக்கொண்டுதான் உள்ளேன்...]
நான் மிகவும் ரசிக்கும் சில நிகழ்ச்சிகளை பட்டியலிட விரும்புகிறேன். எனக்கு ஹிந்தி ஓரளவிற்கு சுமாராய் பேசுவதற்கும், எதிராளி பேசுவதை புரிந்துகொள்ளவும் முடியும். இதே போல தெலுங்கு மற்றும் மலையாளமும். கன்னடம் என் தாய்மொழி. ஆனால் தமிழ், ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியும் எழுத படிக்கத்தெரியாது என்பதில் சிறிது வருத்தமே. எனக்கு ஒரு சில வட இந்தியர்களின் போக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவதாய் இருந்துவருகிறது. அதைப் பற்றி பிறகு... ஓரளவுக்கு மொழி பிரச்சினை இல்லாதலால் சகட்டுமேனிக்கு எல்லா சேனல்களையும் பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தமான சிலவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.
1. The Simpsons - அலுவலகத்தில் என்ன தலை போகிற வேலை இருந்தாலும் 6 மணிக்கு வீடு வந்து சேர்ந்து விட வைக்கிற ஒரு ஒப்பற்ற காவியம் The Simpsons. இதை காண வயது வித்தியாசம் தேவையில்லை என்பதில் ஒரு சிலருக்கு உடன்பாடு இல்லை. பல்கலைகழகம் போகும் நாட்களில் ஆரம்பித்து இதை நான் பார்த்து வருகிறேன். ஒரு அழகான அமெரிக்க குடும்பம் அதன் தலைவர் ஹோமர். ஜே. ஸிம்ப்ஸன், தலைவி மார்ஜ்.பி.ஸிம்ப்ஸன், குடும்பத்தின் மூத்த புதல்வன் பார்ட், அதற்கடுத்தது லிசா, கடைக்குட்டி மாகி. இவர்களுடன் ஒரு நாய். இவர்கள் வசித்து வரும் ஸ்ப்ரிங்ஃபீல்ட் என்னும் ஒரு சிறிய நகரம், இந்த ஸிம்ப்ஸன் குடும்பத்தினர் மற்றும் இந்த நகரத்து மக்கள், இவர்களின் வாழ்கை நிகழ்வுகள் பற்றிய ஒரு மிக சுவாரஸ்யமான ஒரு அற்புதமான cartoon இது. இந்த கார்டூனில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. முதலில் கொஞ்சம் புரியாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். ஒரு சில கதாபாத்திரங்களின் இயல்புகள் புரிந்தாலே போதும், கதையின்பால் ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும். மேலும் ஒவ்வொரு நாளும் ஒரு கதை என்பதால் முதல் நாள் பார்த்திருக்க வேண்டும் என்ற சங்கடங்கள் கிடையாது.
2. செல்லமே செல்லம் - பெரிதாய் ஒன்றும் இல்லை. அதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். சின்ன சின்ன வாண்டுகள், அவர்களின் அம்மாக்களோடு மழலையில் அடிக்கும் லூட்டியை காண கண் கோடி வேண்டும். இந்த வாரம், ஒரு வாண்டுவிடம் தொகுப்பாளனி, உனக்கு அம்மா பிடிக்குமா, இல்லை அப்பா பிடிக்குமா என கேட்டதற்கு "அம்மாதான் பிடிக்கும், ஏன்னா அம்மாதான் நல்லா இருக்காங்க" என தெளிவாய் சொன்னது. ஒரு சில வழக்கமான பதில்கள், "எனக்கு பிடிச்ச பாட்டு மன்மத ராசா, அப்படிப் போடு போடு" என குழதைகளின் ரசனை காலத்தோடு மாறுவதை காட்டினாலும், செல்லமே செல்லம், ஒரு வன்முறை இல்லாத, ஆபாசம் இல்லாத, சினிமா அவ்வளவாக இல்லாத ஒரு நிகழ்ச்சி.
3. Just for Gags - பிரபலமாகி வரும், பிரபலமான[எனது அக்கா பையன், போகோ போட்டால்தான் சாப்பிடுவான், 25 வயது ஆன என் நண்பன் ஒருவனும் அப்படியே!!!] , முற்றிலும் குழந்தைகளுக்கான மற்றொரு சேனல் இது. இந்திய நேரப்படி, இரவு 7.30ற்கு ஒளிபரபப்படும் இந்த நிகழ்ச்சி நம்ம ஊர் 'candid camera' அடிப்படையிலான பல நிகழ்ச்சிகளுக்கு ஒரு சாவால். நல்ல கற்பனை, அதற்கான உழைப்பு, அந்த குழுவினரின் சிரத்தை என மிகவும் ரசிக்க, வியக்க வைக்கும் நிகழ்ச்சி.
4. ..தொடரும்.....

1 Comments:

At 11:09 PM, Blogger அன்பு said...

வணக்கம். நீங்கள் முதல் நாள் குறிப்பிட்டிருந்ததைவிட இப்போதெல்லாம் நீள, நீளமாக எழுத ஆரம்பிச்சிட்டீங்கள்ள, அதுதான் வலைப்பதிவின் நோக்கம். தொடர்ந்து எழுதுங்கள். உங்களை மாதிரி பன்மொழி தெரிந்தவரைப் பார்த்தால் வரும் வழக்கமான பொறாமை/போதாமை உங்கள் மீதும் வருகிறது, பொழச்சுப்போங்க.

இன்னும் உங்களுக்குப்பிடித்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து எழுதுங்கள். இங்கு சிங்கையில் தமிழில் சன் டிவியும், ஜீ டிவி மட்டும்தான் வருகிறது (ஹிந்தியும் அரைகுறை என்பதால், வீட்டில் பார்ப்பது பெரும்பாலும் சன் தான்) இருந்தாலு நல்ல நிகழ்ச்சிகள் எதுவென்று தெரிந்துகொள்ளலாம், டிஷ்கவரி சேனல் போன்ற நிகழ்ச்சிகளை பார்க்களாம்.

எனக்கு ஒரு சில வட இந்தியர்களின் போக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவதாய் இருந்துவருகிறது. அதைப் பற்றி பிறகு... அதையும் எழுதுங்கள், கண்டிப்பாக. நான் கவனித்தவரையில் ஹிந்தியே தெரியாதவர்களுக்கும், ஹிந்தி அதிகம் தெரிந்தவர்களுக்கும் இந்த எரிச்சல் இருக்கிறது. என்னைப்போன்ற அரைகுறைகள் முழுவதும் தெரியாததால் அவர்களைடன் இயைந்து போக முடிகிறது.

அதே போல் உங்களுக்கு, எல்லா தென்னிந்தியமொழிகளும், ஹிந்தியும் தெரியுமென்பதால் உங்களால் முடிந்தவரை தொலைக்காட்சி, திரைப்படத்தின் தரத்தை ஒப்பிடுங்கள். நல்ல நிகழ்ச்சிகள், தரமான, தேவயான நிகழ்ச்சிகள் எந்த மொழியில் அதிகம் வருகிறதென்பதை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அதுபோக தொலைக்காட்சி மட்டுமென்றில்லாமல், சியாச்சின் பற்றியும் பேசுகின்றீர்கள், ஜிடிபி பற்றியும் பேசமுடிகிறது - தொடர்ந்து பேசுங்கள்.

வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

 

Post a Comment

<< Home