Wednesday, October 27, 2004

வட இந்தியர்களின் எரிச்சலூட்டும் மனப்பான்மை...

நான் படித்தது, எங்கள் கிராமத்திலிருக்கும் ஒரு அரசு சார்ந்த தனியார் தமிழ் வழி பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியில். நான் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்த வயதில் அரசு தொலைக்காட்சி மாத்திரமே இருந்தது. அதிலும் அவ்வளவாய் தமிழ் நிகழ்ச்சிகள் இல்லை. ஆண்டெனாவை கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பி இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுண்டு. இந்திய தொலைக்காட்ச்சியை அதிகமாய் ஆக்கிரமித்தது வந்தவை ஹிந்தி நிகழ்ச்சிகளே. விடுமுறை நாட்களில், பாடம் பயின்றது போக, வீட்டிலிருக்கும் வார இதழ்கள் படித்தது போக, பாட்டி வீட்டிற்கு சென்று பாட்டியிடம் இராமாயணம், மகாபாரத கதைகள், நீதி கதைகள் கேட்டது போக, நண்பர்களுடன் சென்று ஊர் பொது நூலகத்தில் அமர்ந்து பேசி பொழுது போக்கியது போக இருக்கும் ஏகப்பட்ட நேரத்தில், அம்மாவுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதுண்டு. என் அம்மா ஒரு workaholic. டிவி பார்க்கும் நேரத்தில் கூட எதாவது பயனுள்ளதாய் செய்துக்கொண்டிருப்பார். என்ன என்ன நிகழ்ச்சிகள் என தெளிவாய் நினைவில்லை. ஆனால் பெரும்பான்மையானவை ஹிந்தி நிகழ்ச்சிகள் என்று மட்டும் தெளிவாய் தெரியும். அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து, பின் ஒரு சில நண்பர்களின் உதவியால் என ஒரு வழியாய் ஹிந்தி கற்றுக்கொண்டேன். இந்த கால கட்டத்தில் ஹிந்தி பாடல்களை ரசித்து கேட்க ஆரம்பித்தேன். ஹிந்தி பேசுவது கொஞ்சம் கெளரவமான, சற்றே அந்தஸ்த்து அதிகமான காரியம் என்றே நினைத்து வந்தேன். என் தாய் வழி மாமா ஒரு சிறந்த அறிவாளி. அவரிடம் எந்த விசயத்தைப்பற்றியும் பேசலாம். ஒரு நாள் அவரிடம் ஹிந்தி ஒரு musical language என்று விவாதித்திருக்கிறேன் [அவருக்கு ஹிந்தி மேல் நல்ல அபிப்பிராயம் இருந் ததில்லை]. காலப்போக்கில் படிப்பதற்காக, அதன்பின் வேலைக்காக என அவ்வப்போது இடம் பெயர்ந்ததில் பல வட நாட்டவரை சந்திக்கவும், பழகவும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு, தமிழ் என்ற ஒரு மொழியின் மேல் இருந்த ஒரு அக்கறை, இம்மொழியில் நான் கற்றவையாவும் பிற மொழிகளை, மொழியினரை, இனத்தவரை போற்றவே சொல்லிக்கொடுத்திருந்தன. அதையே நான் இப்பொழுதும் பின்பற்றி வருகின்றேன். ஆனால், ஹிந்தி பேசும் வட இந்தியர்கள் என்னுடய இந்த கொள்கையை, நிலப்பாட்டை உடைக்கும் வண்ணம் நடந்துக் கொள்வதில் எனக்கு சிறிது வருத்தமே. அப்படி என்னதான் பண்ணினார்கள் வடஇந்தியர்கள் என்பதை, இதன் தொடர்ச்சியை[சிறிதே நீண்டது] சிறிது அவகாசத்தில் எழுதுகிறேன்....

0 Comments:

Post a Comment

<< Home