Friday, December 10, 2004

காதல் - ஒரு சில கதைகளும், ஒரே ஒரு விமர்சனமும்


" இடைவெளிகளை நிரப்பிடும்
காற்றின் விதிகளை மீறிய
காதலைச் சொல்லிக்கொடுத்தது - நீ "

இந்தக் கட்டுரைகளுக்கு/கதைகளுக்கு எந்தவிதமான முன்னுரையும் தர எவ்வித தகுதியும் இல்லாதவனாகிவிட்டதால் - இது எனக்கு சொல்லப்பட்ட, நானாக தெரிந்துக்கொண்ட, பார்த்த, அனுபவித்த பலரின் ஒருசில காதல் கதைகளின் தொகுப்பு. சுமார் முப்பது நாற்பது கதைகள் உள்ளன. இது யாவும் உண்மை கதைகள், நிஜ மனிதர்களையும் உணர்வுகளையும் சுமந்திருப்பன.
[இக்கதைகளை எதன் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி கொச்சைப்படுத்த விருப்பமில்லை;
இக்கதைகள் எந்த இனத்திற்கும் வக்காலத்து வாங்கா [ஆண்/பெண்] ]
கதை 1 -

" நீ
நீயாகவே இரு - நான்
நானாகவே இருக்கிறேன்.
ஏனென்றால்
எனக்கு, என்னைவிட
உன்னைத்தான் ரொம்ப பிடிக்கும் "

தென் தமிழக மாவட்ட கல்லூரிகளுக்கே உரித்தான கட்டுப்பாடுகளுடன் கூடிய பொறியியல் கல்லூரி அது. அதன் நீண்ட வராண்டாக்களை எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி மிதித்துச் சென்ற காதல்கள்தான் எத்தனை, எத்தனை. நம் கதையின் கதாபாத்திரங்கள் அனைவருக்குமே அது முதல் வருடம்.
கல்லூரியின் முதல் சினேகங்கள் எட்டிப்பார்க்கும் முதல் மாதம். நம் கதாநாயகனின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர் பெயர்.... கடம்பன் [என வைத்துக்கொள்ளலாம்]. ஒரு உயர் மத்திய தர குடும்ப வாரிசு. பார்க்க ரொம்ப சாதுவாய் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போன்ற ஒரு முக ஜாடை. அமைதியான பேச்சு. அச்சம்,மடம்,நானம் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்துக்கொடுத்தார் போல ஒரு ஜாடை. இவையெல்லாம் கல்லூரியில் மட்டும்தான். விடுதியில் தெரியும் விபரீதம். ஆனால் யாருக்கும் தீங்கு இழைத்தலைப்பற்றிய சிந்தனையே இல்லாதவன்.
பொழுதுப்போகாத சனிக்கிழமை இரவுகளில், விடுதியில் விடிய விடிய பேசிக்கொண்டிருப்பதுதான் எங்களுக்கு அப்போதைய ஒரே பொழுதுப்போக்காக இருந்தது. அது இதுவென ஒரு வரைமுறையில்லாமல் எல்லாவற்றையும் பற்றி பேசுவோம். இப்படிக்கா ஒரு சனிக்கிழமையில் நம் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நம் அருமை கதாநாயகன் கடம்பன், தம் திருவாய் மலர்ந்து தாம் காதல்வயப்பட்டிருப்பதைப்பற்றி உலறிவிட்டார். அச்சமயத்தில் சபையில் இருந்தது நான்கே நான்கு பேர்தாம். அந்த நான்கு பேரில் அடியேனும் ஒருவன். என் பாக்கியம்...
என் கல்லூரி வாழ்வின் முதல் காதல் கதை வெளிவந்த அந்த பொன்னான தருணத்தில் நானும் அங்கே இருந்தது என் பாக்கியம்தானே. "பொண்ணு யாருடா?"... இந்த கேள்விக்கு அவரிடமிருந்து விடை வாங்குவது எளிதென சின்ன தப்பு கணக்கு போட்டுவிட்டோம். சரியாக சுமார் ஒரு நாள் ஆனது. மறுநாள், ஞாயிறு முழுவதும் அவன் அறையிலேயே தவமிருந்து ஒரு வழியாய் பதிலை அவன் வாயிலிருந்து நெம்பி எடுத்து விட்டோம். பொண்ணு பேர் "கடம்பி". ஆனால் B செக்சன். நாங்கள் எல்லோரும் A செக்சன். நாங்க அந்த பொண்ணு பெயரைக் கேள்விப்பட்டது கூட இல்லை. அது யாரென்று தெரிந்துக் கொள்ள மறுநாள் வரை காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை. அந்த செக்சன்காரன் யாரையாவது கூப்பிட்டு கேட்டால் அது நாங்களே போய் கல்லூரி நிர்வாகத்திடம், "எங்கள் நண்பன் இந்த பெண்ணின் மேல் காதல் வயப்பட்டுள்ளார்" என போட்டுக்கொடுப்பதற்கு சமானம். ஆகவே ஒரே நாள், ஒரே ஒரு இரவு காத்திருக்க முடிவு செய்தோம்...

















1 Comments:

At 12:03 AM, Blogger விக்கி said...

அருமை

 

Post a Comment

<< Home