ஆறு, ஏழு மாதங்களுக்கு பிறகு ஊருக்கு போவதால் ஏற்படும் எந்த எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை. 1270 கிலோமீட்டர்கள் புகைவண்டியில் பயணம் செய்யப்போகும் ஒரு பயம் கலந்த எரிச்சல்... ஆனால், பெற்றோரையும், தம்பியையும் காணத்தான் இந்த பயணம் என்ற எண்ணம் சுகமாக இருந்ததென்னவோ உண்மை.
இம்முறை பயணம் சற்றே ஆச்சர்யம் கலந்ததாகத்தான் இருந்தது. அது புகைவண்டி நிலையத்துக்கு போகும் வழியில் பேருந்தில், எனக்கருகில் இருந்தவர்களின் உரையாடலில் ஆரம்பித்தது. எனக்கருகில் அமர்ந்திருந்த இருவரும், சென்னைமாநகரைச் சேர்ந்தவர்கள். அதில் ஒரு அன்பர் விட்ட சரடு, இன்னும் என் காதுகளில். அவர் வெகு சுவாரஸ்யமாக தன் கல்லூரி நாட்களின் லீலைகளை அடுக்கிக்கொண்டே இருந்தார். நடு நடுவே, திரைப்படங்களில் வருவது போன்ற 'punch dialogues' - "நான் என் பிரண்ட்ஸ்காக் எதுனாலும் பண்ணுவேனா", "பேரைச் சொன்னாலே" வகையறாக்கள். அவர்தம் நண்பர் வேறு இவரை ஏற்றிவிட்டுக்கொண்டே இருந்தார். ஒரு வழியாய் புகைவண்டி நிலையம் வந்ததும் பேருந்தில் இருந்து வேக வேகமாய் கீழே குதித்து தப்பித்தேன் என்றால் அதுதான் இல்லை. கூட்டமும் விதியும் எங்கள் மூவரையும் அடுத்தடுத்து தள்ளிக்கொண்டே சென்றது. கிடைத்த சந்தர்பத்தில் அவரிடம் தப்பித்து, கொஞ்ச தூரம் நடந்து, மற்றொரு வழியே, சென்னை செல்லும் வண்டி வரும் பிளாட்பாரத்தை அடைந்தேன். அங்கு ஆரம்பித்தது மற்றொரு ஆச்சர்யம். ..
நான் நெடு நாட்களாக காண வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனது உறவுக்காரர் ஒருவரைச் சந்தித்தேன். அவருடன் இரவு நெடு நேரம் பேசிக்கொண்டு வந்ததில் பயண தூரமும் நேரமும் சற்றே குறைந்துதான் போயிற்று. அவருக்கு சுமார் 32/33 வயது இருக்கலாம். [சரியாய் ஞாபகம் இல்லை] பொறியியல் படித்து முடித்து, வேலை செய்து, வெளிநாடு சென்று வந்து, பின் சுயமாய் தொழில் முனைந்து, அதன் பிறகு இப்போது, ஒரு நிறுவனத்தில் மேலாளர்களுக்கு மேலாளராய் உள்ளார். அவரின் 10 வருட அனுபவத்தை கேட்டதில் கிட்டத்தட்ட விடிந்து விட்டது. அதன் பிறகு, எனது படுக்கைக்கு சென்று சுமாராய் தூங்கி விழித்த போது, சென்னை மாநகர் வந்துவிட்டது. சென்னையிலும் அதன் சுற்று புறங்களிலும் நல்ல மழை பெய்ததற்கான, பெய்யப்போவதற்கான அறிகுறி ஆங்காங்கேயும், வானத்திலும் தென்பட்டது. வழக்கம்போல, ஆட்டோ ஓட்டுனரிடம் அதிகபடியாக சண்டைப்பிடிக்காமல், எனது தாய்மாமனாரின் வீடு போய்ச்சேர்ந்தேன். அங்கே ஒரு நாள் தங்கி, நண்பர்களையும், எனது அப்பாவின் சிநேகிதரையும் சந்தித்து, மறுநாள் கிளம்பி ஊர் போய்ச்சேர்ந்தால், போகும் வழியெல்லாம் மழை. மழை மகிழ்ச்சியளித்தது.
வீட்டைப்போல் சொர்க்கமுண்டா? அதுவும், தாயும் தந்தையும், சகோதரனும், 5 நிம்மதியான நாட்களும்... எனது, சகோதரிகள் இருவரையும் அதிசயமாய் ஒன்றாய் காண முடிந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி... மூத்த சகோதரியின் பெண் குழந்தை, வழக்கமான அமெரிக்க குழந்தையைப்போன்று, கொழுக்மொழுக்கென்று, புக்ஷ்டியாய் இருந்தது. குழந்தை பிறந்தபின் இப்போதுதான் இந்தியா வருகிறாள். 7 மாத குழந்தை... பிரிந்து வர மனமேயில்லை. இளைய சகோதரியின் மகன், , நாளேடுகளில் காணும் முருகன் படம் போலவே இருப்பான். அற்புதமாய் சிரிப்பான். அடுத்த வருடம் பள்ளிக்குச்செல்வான்... எந்த நாட்டில் என்று தெரியவில்லை. எந்த நாடாயிருந்தாலும், எந்த பள்ளியாயிருந்தாலும், பாவம் அவனுக்கு ஆசிரியராய் அமையவிருப்பவர்கள். பாடாய் படுத்தி எடுக்கப்போகிறான்.... இனி ஊரில் நடந்த நிகழ்வுகள்...