Friday, October 29, 2004

வெடிகுண்டு தேசம்...

வியட்நாம் என்றொரு தேசம், அதில் அமெரிக்கா நடத்திய போர், இரு நாடுகளிலும் அதன் தாக்கம்... நவீன வரலாற்றின் மிகவும் கறை படிந்த பக்கங்கள். வியட்நாம் போரை இரண்டாம் உலகப்போரின் ஒரு தொடர்ச்சியாய்கூட கூறலாம். சைனாவின் ஆதிக்கத்தில் இருந்த வியட்நாமை மெல்ல மெல்ல 1860ல் ஆக்கிரமிக்க ஆரம்பித்த பிரான்சு 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதன் கட்டுக்குள் கொண்டுவர தொடங்கியது. இதன் நடுவே தன் பலத்தைக் காட்ட நினைத்த ஜப்பான், வியட்நாமை அடைய பிரான்சுடனான போராட்டத்தை தொடங்கி, 1945ல் ஒருவாறு, வியட்நாமியர்களை வைத்தே ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. விடுவானா வீரன்? ஜப்பானியர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வர பிரான்சு பெரும் பிராயத்தனப்பட்டது. ஆனால், 1954ல் பிரான்சு தோல்வியுற்று, நாட்டை விட்டு வெளியேறியது. அப்போது நாடு வ்டக்கு, தெற்கு என இரு பிரிவுகளாக இருந்தது. வட பகுதியை கம்யூனிஸ்டுகள் கவனித்து கொள்ள தென் பகுதியை, வியட்நாமின் அதிபராக சுய பிரகடனம் செய்து கொண்ட Ngo Dinh Diem தத்தெடுத்துக்கொண்ட கையோடு, தென் பகுதியை வியட்நாம் குடியரசு என பிரகடனபடுத்தினார். தென் வியட்நாமின் இந்த முக்கிய பிரகடனத்தினால் கவரப்பட்டு, ஏராளமான வடவியட்நாமியர்கள் தென் பகுதிக்கு குடிபெயர தொடங்கினர். வடபகுதியை ஆண்டு வந்த கம்யூனிஸ்டுகள் தெற்கில் இருந்த தமது தோழர்களின் உதவியோடு, 1955ல் இருந்து வட பகுதிக்காக போரிட ஆரம்பித்து, 1963ல், Ngo Dinh Diem ன் ஆட்சியை கவிழ்த்ததோடு அவரை கொல்லவும் செய்தனர்[மரணதண்டனை]. வடவியட்நாமையும், தென்வியட்நாமையும் இணைத்தாயிற்று, அதற்கு அடுத்ததாக, அந்த நாட்டில் மிச்சம் மீதியிருந்த, தன்னிச்சையாய் இயங்கிவந்த சில, பல குறுநிலங்களையும் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியாயிற்று. இதில் அமெரிக்கா எங்கிருந்து வந்தது?....பிறகு....
[வியட்நாமில் அமெரிக்கா வீசிய குண்டுகளின் அளவு... சில மில்லியன் டண்கள். வீசப்பட்ட மொத்த குண்டுகளின் எண்ணிக்கை...[முடிந்தால் கற்பனை செய்து கொள்ளுங்கள்] தொடர்ச்சியாய், 9 ஆண்டுகளுக்கு, 8 நிமிடத்திற்கு ஒரு முறையென குண்டுகள் வீசினால் அது எத்தனை குண்டுகளோ, அத்தனை குண்டுகள். இன்னமும் வியட்நாமில் தினமும் செயலிழந்த, செயலிழக்காத என வகை வகையாய் குண்டுகள் கிடைத்தவண்ணம் உள்ளன. இது வெடிகுண்டு தேசம்தானே!!!]

Wednesday, October 27, 2004

வட இந்தியர்களின் எரிச்சலூட்டும் மனப்பான்மை...

நான் படித்தது, எங்கள் கிராமத்திலிருக்கும் ஒரு அரசு சார்ந்த தனியார் தமிழ் வழி பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியில். நான் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்த வயதில் அரசு தொலைக்காட்சி மாத்திரமே இருந்தது. அதிலும் அவ்வளவாய் தமிழ் நிகழ்ச்சிகள் இல்லை. ஆண்டெனாவை கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பி இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுண்டு. இந்திய தொலைக்காட்ச்சியை அதிகமாய் ஆக்கிரமித்தது வந்தவை ஹிந்தி நிகழ்ச்சிகளே. விடுமுறை நாட்களில், பாடம் பயின்றது போக, வீட்டிலிருக்கும் வார இதழ்கள் படித்தது போக, பாட்டி வீட்டிற்கு சென்று பாட்டியிடம் இராமாயணம், மகாபாரத கதைகள், நீதி கதைகள் கேட்டது போக, நண்பர்களுடன் சென்று ஊர் பொது நூலகத்தில் அமர்ந்து பேசி பொழுது போக்கியது போக இருக்கும் ஏகப்பட்ட நேரத்தில், அம்மாவுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதுண்டு. என் அம்மா ஒரு workaholic. டிவி பார்க்கும் நேரத்தில் கூட எதாவது பயனுள்ளதாய் செய்துக்கொண்டிருப்பார். என்ன என்ன நிகழ்ச்சிகள் என தெளிவாய் நினைவில்லை. ஆனால் பெரும்பான்மையானவை ஹிந்தி நிகழ்ச்சிகள் என்று மட்டும் தெளிவாய் தெரியும். அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து, பின் ஒரு சில நண்பர்களின் உதவியால் என ஒரு வழியாய் ஹிந்தி கற்றுக்கொண்டேன். இந்த கால கட்டத்தில் ஹிந்தி பாடல்களை ரசித்து கேட்க ஆரம்பித்தேன். ஹிந்தி பேசுவது கொஞ்சம் கெளரவமான, சற்றே அந்தஸ்த்து அதிகமான காரியம் என்றே நினைத்து வந்தேன். என் தாய் வழி மாமா ஒரு சிறந்த அறிவாளி. அவரிடம் எந்த விசயத்தைப்பற்றியும் பேசலாம். ஒரு நாள் அவரிடம் ஹிந்தி ஒரு musical language என்று விவாதித்திருக்கிறேன் [அவருக்கு ஹிந்தி மேல் நல்ல அபிப்பிராயம் இருந் ததில்லை]. காலப்போக்கில் படிப்பதற்காக, அதன்பின் வேலைக்காக என அவ்வப்போது இடம் பெயர்ந்ததில் பல வட நாட்டவரை சந்திக்கவும், பழகவும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு, தமிழ் என்ற ஒரு மொழியின் மேல் இருந்த ஒரு அக்கறை, இம்மொழியில் நான் கற்றவையாவும் பிற மொழிகளை, மொழியினரை, இனத்தவரை போற்றவே சொல்லிக்கொடுத்திருந்தன. அதையே நான் இப்பொழுதும் பின்பற்றி வருகின்றேன். ஆனால், ஹிந்தி பேசும் வட இந்தியர்கள் என்னுடய இந்த கொள்கையை, நிலப்பாட்டை உடைக்கும் வண்ணம் நடந்துக் கொள்வதில் எனக்கு சிறிது வருத்தமே. அப்படி என்னதான் பண்ணினார்கள் வடஇந்தியர்கள் என்பதை, இதன் தொடர்ச்சியை[சிறிதே நீண்டது] சிறிது அவகாசத்தில் எழுதுகிறேன்....

Sunday, October 24, 2004

எனக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்....

பெரும்பாலான வார இறுதி நாட்களில் தொலைக்காட்சி மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன். இங்கு [ஐதராபாதில்] தமிழ் புத்தகங்கள் அவ்வளவாய் கிடைப்பதில்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பல்பொருள் அங்காடியில் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிக்கைகள் மட்டுமே கிடைத்து வருகின்றன. அவற்றை வார நாட்களில் படித்து விடுவதால் வாரத்தின் கடைசி நாள் தொலைக்காட்சியே சரணம். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் மிகவும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி ஜெயாவில் வரும் செல்லமே செல்லம். அதன் பிறகு இருக்கவே இருக்கிறது விசுவின் அரட்டை அரங்கம். அந்த வாரத்து தலைப்பை பொருத்து வேறு நிகழ்ச்சிகளுக்கு போவதுண்டு. டிஸ்கவரி சேனலின் ஒரு அங்கமான டிஸ்கவரி டிராவல் பல நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி வருவது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. அதுவும் ஞாயிறு என்றால் கொண்டாட்டம்தான். மதியம் என்ன செய்வதென்றே புரியாத சமயங்களில் பழைய புத்தகங்கள் படிப்பதுண்டு. அப்படியாக இந்த வாரம் படித்தது அசோகமித்திரன் அய்யா அவர்களின் பேட்டிகளும் கட்டுரைகளும். மாலைப்பொழுதுகளில் நண்பர்களோடு காலாற நடை பயின்றுவிட்டு வீடு திரும்பினால் simpsons, அதன் பிறகு wwe wrestiling. இப்படியாய் என் ஞாயிற்றுக்கிழமைகளை ஒரு வழியாய் ஓட்டிமுடிக்கின்றேன்.
[இப்பொழுதும், இன்னும் நான் தட்டச்ச பழகிக்கொண்டுதான் உள்ளேன்...]
நான் மிகவும் ரசிக்கும் சில நிகழ்ச்சிகளை பட்டியலிட விரும்புகிறேன். எனக்கு ஹிந்தி ஓரளவிற்கு சுமாராய் பேசுவதற்கும், எதிராளி பேசுவதை புரிந்துகொள்ளவும் முடியும். இதே போல தெலுங்கு மற்றும் மலையாளமும். கன்னடம் என் தாய்மொழி. ஆனால் தமிழ், ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியும் எழுத படிக்கத்தெரியாது என்பதில் சிறிது வருத்தமே. எனக்கு ஒரு சில வட இந்தியர்களின் போக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவதாய் இருந்துவருகிறது. அதைப் பற்றி பிறகு... ஓரளவுக்கு மொழி பிரச்சினை இல்லாதலால் சகட்டுமேனிக்கு எல்லா சேனல்களையும் பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தமான சிலவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.
1. The Simpsons - அலுவலகத்தில் என்ன தலை போகிற வேலை இருந்தாலும் 6 மணிக்கு வீடு வந்து சேர்ந்து விட வைக்கிற ஒரு ஒப்பற்ற காவியம் The Simpsons. இதை காண வயது வித்தியாசம் தேவையில்லை என்பதில் ஒரு சிலருக்கு உடன்பாடு இல்லை. பல்கலைகழகம் போகும் நாட்களில் ஆரம்பித்து இதை நான் பார்த்து வருகிறேன். ஒரு அழகான அமெரிக்க குடும்பம் அதன் தலைவர் ஹோமர். ஜே. ஸிம்ப்ஸன், தலைவி மார்ஜ்.பி.ஸிம்ப்ஸன், குடும்பத்தின் மூத்த புதல்வன் பார்ட், அதற்கடுத்தது லிசா, கடைக்குட்டி மாகி. இவர்களுடன் ஒரு நாய். இவர்கள் வசித்து வரும் ஸ்ப்ரிங்ஃபீல்ட் என்னும் ஒரு சிறிய நகரம், இந்த ஸிம்ப்ஸன் குடும்பத்தினர் மற்றும் இந்த நகரத்து மக்கள், இவர்களின் வாழ்கை நிகழ்வுகள் பற்றிய ஒரு மிக சுவாரஸ்யமான ஒரு அற்புதமான cartoon இது. இந்த கார்டூனில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. முதலில் கொஞ்சம் புரியாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். ஒரு சில கதாபாத்திரங்களின் இயல்புகள் புரிந்தாலே போதும், கதையின்பால் ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும். மேலும் ஒவ்வொரு நாளும் ஒரு கதை என்பதால் முதல் நாள் பார்த்திருக்க வேண்டும் என்ற சங்கடங்கள் கிடையாது.
2. செல்லமே செல்லம் - பெரிதாய் ஒன்றும் இல்லை. அதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். சின்ன சின்ன வாண்டுகள், அவர்களின் அம்மாக்களோடு மழலையில் அடிக்கும் லூட்டியை காண கண் கோடி வேண்டும். இந்த வாரம், ஒரு வாண்டுவிடம் தொகுப்பாளனி, உனக்கு அம்மா பிடிக்குமா, இல்லை அப்பா பிடிக்குமா என கேட்டதற்கு "அம்மாதான் பிடிக்கும், ஏன்னா அம்மாதான் நல்லா இருக்காங்க" என தெளிவாய் சொன்னது. ஒரு சில வழக்கமான பதில்கள், "எனக்கு பிடிச்ச பாட்டு மன்மத ராசா, அப்படிப் போடு போடு" என குழதைகளின் ரசனை காலத்தோடு மாறுவதை காட்டினாலும், செல்லமே செல்லம், ஒரு வன்முறை இல்லாத, ஆபாசம் இல்லாத, சினிமா அவ்வளவாக இல்லாத ஒரு நிகழ்ச்சி.
3. Just for Gags - பிரபலமாகி வரும், பிரபலமான[எனது அக்கா பையன், போகோ போட்டால்தான் சாப்பிடுவான், 25 வயது ஆன என் நண்பன் ஒருவனும் அப்படியே!!!] , முற்றிலும் குழந்தைகளுக்கான மற்றொரு சேனல் இது. இந்திய நேரப்படி, இரவு 7.30ற்கு ஒளிபரபப்படும் இந்த நிகழ்ச்சி நம்ம ஊர் 'candid camera' அடிப்படையிலான பல நிகழ்ச்சிகளுக்கு ஒரு சாவால். நல்ல கற்பனை, அதற்கான உழைப்பு, அந்த குழுவினரின் சிரத்தை என மிகவும் ரசிக்க, வியக்க வைக்கும் நிகழ்ச்சி.
4. ..தொடரும்.....

Saturday, October 23, 2004

என்ன? எதற்கு? எப்படி?

அன்புடையீர்,
இந்த வாரம் என் கவனத்தை கவர்ந்த[!!!] நிகழ்வுகள் மற்றும் செய்திகளில் மிகவும் முக்கியமானவை என நான் கருதுவதை பட்டியலிடுகிறேன்.இதற்கு இந்திய தொலைக்காட்சிகளில் நீங்கா இடம் பிடித்த கவுண்ட் டவுன் நிகழ்ச்சிகளின் சாயல் இருந்தால் அதற்கு பெப்சி உமா, மமதி [மற்ற பெயர்களை மறந்ததுவிட்டேன்] போன்ற மாமேதைகள் அன்றி வேறு யார் காரணமாக இருக்ககூடும்?
1. உலகின் முக்கியமான ஒரு நீர் ஆதாரத்தை நாமும் நமது பங்காளியும் சேர்ந்து வழக்கம் போல யாருக்கும் உபயோகமற்றதாக்கி வருகிறோம்.
அதாகப்பட்டது, உலகின் மிக முக்கியமான் நீர் வளமாக கருதப்பட்டு வரும் சியாச்சின் கிளேசியர், நமக்கும் நமது அண்டை நாடான பாகிஸ்தானத்திற்கும் இடையில் இமாலயத்தில் அடிக்கடி நடக்கும் அல்லது அவ்வப்போது நடக்கும் சிறிய, எப்போதாவது நடக்கும் பெரிய வெட்டுக்குத்து அடிதடியினால் மாசுபடுகின்றது. மேலும் விண்வெளிக்கலங்களினால் எடுக்கபட்ட பல புகைபடங்களின் உதவியோடு அதன் அகலமும் குறைந்து வருவது கண்டுபிடிக்கபட்டுள்ளது. இதனால் ஏற்படவிருக்கின்ற அபாயங்களை நான் தமிழ் விசைப்பலகையில் நன்றாக அல்லது சுமாராக தட்டச்ச பழகியவுடன் அவ்வை மூதாட்டி போல் வரிசைப்படுத்துகின்றேன்.
2. நான் வீரப்பனை பற்றி பேசப்போவதில்லை [ஆஹா, பேசிவிட்டேனே!!!]
3. இந்தியாவின் அந்நியசெலாவணி கையிருப்பு - 118 பில்லியன் அமெரிக்க டாலர்கள் [அட ங்கொப்புரானே]
பள்ளி நாட்களில், கோடை விடுமுறையை கழிக்க சென்னை வருவதுண்டு. சென்னையின் நகை, துணி கடைகளின் விஸ்தாரத்தால் என் அம்மா என் அப்பா,அத்தை, மாமா மற்றும் என் அத்தை பிள்ளைகளோடு மிக நீண்ட தியாகராய நகர் தெருக்களில் உள்ள துணி மற்றும் நகை சாம்ராஜ்யங்களுக்கு விஜயம் செய்வதுண்டு. சாயங்கால நேரத்து பாண்டி பஜார் சொர்க்கம் போலிருக்கும். நகைக்கடைகளின் கூட்டம் இந்தியா, கிராமபுரங்களில் மாத்திரமே ஏழை நாடு [சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்னால்] என்று உணர்த்திக்கொண்டிருக்கும். அது கிடக்கட்டும். இப்போதைய கையிருப்பான 118 பில்லியன் டாலரை என்ன பண்ணாலாம்? இப்போதைய பொருளாதார நிலையில், கையிருப்பு இன்னும் பல மடங்காகும் வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது. ஜிடிபி [gdp] எனப்படும் GROSS DOMESTIC PRODUCT 1989-90க்குப் பிறகு இந்த ஆண்டு 7-8 % வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இதை மேம்போக்காக பார்த்தால், நல்ல விசயம் போல தெரிந்தாலும் உண்மை அதற்கு சற்று அப்பாலே உள்ளது. எப்படி என்று நாளை பார்க்கலாம்.

நோக்கம்...

எல்லோருக்கும் வணக்கம்,
நோக்கம் என்று பெரிதாய் எதுவும் இல்லை. என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றிய என் பார்வைகள், எப்போதாவது கவிதை என்று நான் கூறிக்கொள்ளும் என்னுடைய ஒரு சில கிறுக்கல்கள் [பார்த்திபன் மன்னிப்பாராக], எனக்கு சோறு போடும் எனது தொழில் பற்றி, அதனில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி, எங்கேயாவது படித்ததில் பிடித்தது பற்றி [அய்யகோ, எத்தனைப் "பற்றி", அநேகமாக 5 அல்லது 6 வருடங்களில் நான் எழுதிய மிக நீண்ட வார்த்தை இதுவாய்தானிருக்கும்] எழுதலாம் என்று இருக்கிறேன்.